Saturday, November 13, 2010

தேவதை பெண்கள்


வண்ணத்து பூச்சிகள்
சில என்னை கடந்து சென்றன......
சிறிதே உற்று பார்த்த பின்

கைகளும் கால்களும்
அவற்றிற்கு.........

நிலாக்கள் சில
ஒளி வீசி சென்றன
பார்த்த பின்னோ
முகம் காட்டி நகைத்தன.........

ரோஜாக்கள் பல
மனம் வீசி சென்றன.....
அருகே சென்ற பின்
விழி விரித்து நகைத்தன..........

ஏனோ உவமைகள் போதவில்லை....
இத்தேவதை பெண்களை
அழகுபடுத்த........


வேறோர் உலகம்
இங்கே உங்களால்
எங்களுக்கு.....
உணர்வுகளின் சிலிர்ப்புகள் சில
உங்கள்
நகைத்தலால்,நடத்தலால்.

கனல்களை வீசி விட்டு
ஏனோ
கரிசனமே காட்டாமல்
உங்கள் நடைகள்........


கொள்ளையடிப்பது தவறென்றால்.......
இதயத்தில் மட்டும்
என்ன மாறுபாடுகள்........????

எங்கள் தேவதை பெண்களே!!!!!!!!!!!!





எங்கள் தேவதை பெண்களே!!!!!!!!!!!!

முயற்சியின் முன்னுரை.....


முதல் பக்கத்தின்
முன்னுரை இன்றி
ஒரு கதையோ....காவியமோ
என்றுமே தொடங்குவதில்லை......


ஒரு நீண்ட கதையோ......
ஒரு நெடுங்காவியமோ......
முன்னுரையின் மொழிகள் கற்பிக்கின்றன‌
தொடரப் போகும் படைப்பின் ஆக்கத்தை......


முயற்சியின்றி இங்கு
எவையுமே தொடங்குவதில்லை........
உங்கள் வாழ்க்கையோ...,வெற்றியோ....
உங்கள் காதலோ.....,கவிதையோ....

காற்றை உள்ளிழுக்கும்
உங்கள் முதல் முயற்சியோடு
தொடங்குகிறது உங்கள் வாழ்க்கை.......
உட்காரவும்.......,நடக்கவும்.....
பேசவும்........,உண்ணவும்..........
நினைவுகளே இல்லாத
உங்கள் மழலை நாட்களிலே
முளைத்து விடுகின்றன‌
உங்கள் வாழ்க்கைகான முயற்சிகள்..........


முயற்சியற்று இங்கு
எவையுமே தொடங்குவதில்லை.....
சில நேரம் அவை உங்களால் அறியப்பட்டு......
சில நேரம் உங்களை அறியாமலே......

உங்கள் கனவுகளின் வானவில்
வண்ணங்களற்று கருப்பு வெள்ளையாக
துவங்கும் பொழுதே.........
அவற்றிற்கு வண்ணங்கள் சேர்ப்பவை
உங்கள் முயற்சிகள் தான............


தோல்விகள் சில நேரம்
உங்கள் கை வரக் கூடும்........
வீழ்ச்சியின் வழிகளை சில நேரம்
நீங்கள் காண கூடும்......

ஆனால் ......
இழப்பதறகு இங்கு
எப்பொழுதுமே ஒன்றும் இல்லை......
முயல்வதற்கோ.........
இந்த உலகமே உங்கள் கைகளில்.......


மிகப் பெரிய கனவுகளோ......
மிகச் சரியான வெற்றிகளோ.....
மிகச் சிறந்த வாழ்க்கைகளோ......
இங்கு முயற்சியின் முகவரிகள் இன்றி
தங்களை விலாசப்படுத்திக் கொள்வதில்லை.....


முயற்சிகள் மனிதனின்
தனி உடைமைகள் அல்ல..........
எங்கெல்லாம்
ஒரு உயிரின் சாயை தெரிகிறதோ
அங்கெல்லாம் இருக்கின்றன முயற்சிகள்....
அவை விலங்குகளோ....விதைகளோ......
வித்தியாசங்கள் அறிவதில்லை அவை......


துன்பத்தின் நிழல்கள்
உங்களை சூழும் போதெல்லாம்
நீங்கள் நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்...

"முயன்றால் இங்கு இயலாதது எதுவுமே இல்லை"
என்பதை.........

உங்கள் வாழ்க்கையின்
அழகான பக்கங்கள்
இனியெங்கிலும்
இனிமையாய் நிரம்பட்டும்...
உங்கள் முயற்சியின் முன்னுரையோடு....

இர.குமார்.

நேசங்கள் விற்பனைக்கில்லை




ஒரு நிசப்த இரவிவினில்
கண்ணயர்ந்த வேளையிலே.......
மேலிருந்து வானங்கள் திறக்க‌
என் அறை முழுதும்
பணக் கற்றைகளால் நிரம்பியது....

விழிகள் முழுதும் அகல.......
கதவுகள் திறந்து வெளி ஓடினேன்......
மனம் முழுதும் கொள்ளை மகிழ்ச்சியாய்
அந்த பணக் கற்றைகளோடு...........

சில நேரக் களியாட்டங்கள்......
சில நேரப் பொழுதுபோக்குகள்........
சில நேர இன்பங்கள்..........
பாதி பணக் கற்றைகள்
தீர்ந்த பின்னே............
மெல்லமாய் வெறுமையின் பிடிகள்
மனதை இறுக்க‌......,
தனிமைச் சிறகுகள் விரிந்து கொண்டன......

வெறுமையின் பிடிகளை வெட்டித் தள்ள....
இருந்த பணக் கற்றைகள் எல்லாம் கொண்டு...
என் மேல் பரிவுகள் கொள்ள
சில மனங்களை வாங்க முயற்சித்தேன்........

இருந்த நல்ல மனங்கள் எல்லாம்
விலைக்கு வர மறுத்தன...........
விலைக்கு வந்த கள்ள மனங்களை
எல்லாம் என் மனம் வாங்க மறுத்தது...........

போதி மரத்து கௌதமனாய்
சில உண்மைகள்
நிச்சயமாய் எனக்கு புரிந்து போயிற்று......

நேசங்கள் இன்னும் மலிந்து விடவில்லை
இந்த உலகத்தில்..........
எத்தனை பணங்கள் இருந்தாலும்
நேசங்கள் இங்கு விற்பனைக்கில்லை என்பது.......

அளவுகோல்

என்னை எவ்வளவு பிடித்திருக்கிறது.............?

உனக்கான என் நேசத்திற்கு
கண்கள் சிமிட்டி கணக்குகள் கேட்கிறாய்...?

இதழ்களில் புன்னகை விரித்து
அளவுகள் கேட்கிறாய்........?

உனக்கு ஏன் புரியாமலே போனது........

இருக்க இடம் இல்லாமல்
நிரம்பி வழிகின்றன உன் நினைவுகள்
என் மனம் முழுவதும் என்று.............

இர.குமார்.

நகங்கள்






உன் நகங்களாய்
வாழவே ஆசைபடுகின்றன
என் நினைவுகள்...............
வெட்டி எறிந்தாலும்
விடாது முளைக்க
எப்பொழுதும் உன்னோடு.

இர.குமார்.

விழுதுகள்





மரங்களை பார்க்கும்போதெல்லாம்
மனம் விழுதுகளை
விடுகிறது..................

அவற்றின் கீழ்
நாம் சந்தித்த வேளையின்
நினைவுகளை தாங்க...............

இர.குமார்.

புன்னகை





ஓர் யுகங்கள் காலங்கள்
உன் புன்னகைக்காக‌
தவம் இருக்கிறேன்...........

கிடைத்த பொழுதுதான் புரிந்தது.....

உன் புன்னகையின் அர்த்தங்களே
நான் தான் என்று........

இர.குமார்.

காதல் கண்ணாமூச்சிகள்




உன்னை பார்த்ததுமே
காணாதது போல்
விழிகள் திருப்பிக் கொள்கிறாய்..........

நான் பார்க்காத போதெல்லாம்
வெட்கத்தின் மறைவில் நின்று
வேடிக்கை பார்க்கிறாய்...........

நன்றாகத் தான் இருக்கிறது
கட்டுக்கள் இல்லாத இந்த
காதல் கண்ணாமூச்சிகள்.............

உன்னை கண்டுபிடித்துமே
இங்கு தோற்றதாய் நடிக்கிறேன்
ரசிக்கும் இந்த
காதல் கண்ணாமூச்சிகள்
இன்னும் தொடர்வதற்காக.........


இர.குமார்.

Friday, November 12, 2010

மின்மினிப் பூச்சி......


அழகாய்தான் மின்னுகிறாய்
என் காதலியே
தொலைவில்....................
அருகில் வந்ததும்
ஏனோ மறைந்து போகிறாய்..............

உந்தன் வெளிச்சங்களை தேடி
எப்பொழுதும் என் சுவடுகள்
புதைந்த இருளில் மறைந்து
போவாய் என்றே தெரிந்திருந்தும்..............

நடைபாதை பொம்மை கடைகளை
பார்த்த சிறு குழந்தையை போல்
என் மனம் உன்னை பார்த்து...............
மை தீர்ந்த பேனாவை போல்
நின்று போகிறது உன்னை காணாமல்..............

எழுதி முடித்த கவிதை போலவே
உன்னை வாசிக்க விரும்புகிறேன்..........
இருந்தும் தாளகள் அனைத்தும்
மையின்றி வெள்ளையாய்..................


அழகான வண்ணத்துப் பூச்சி நீ
என்று நினைத்தே
என் கைகளை நீட்டுகிறேன்...............

நீயோ என் காதலி...............
இருளில் தொலைந்து பிறக்கும்
மின்மினிப் பூச்சி......
கண்களில் அருகில்........
எப்பொழுதும்
கைகளில் தொலைவில்.............

இர.குமார்.

குறிஞ்சிப் பூக்கள்




சின்ன சின்ன சண்டைகளில்
உன் முகத்தில் தெரியும் கோபங்களை
எப்பொழுதுமே இரசிக்கிறேன்...........
அவை அரிதாக பூக்கும்
குறிஞ்சிப் பூக்கள் என்பதால்.

இர.குமார்.

கண்ணாடி




கண்ணாடியில்
முகம் பார்க்கும் போதெல்லாம்
ஏனோ உன் ஞாபகம்.........
உன் முன்
அழகாய் இருக்க விரும்பியதால்.

ஆனால்,
முகம்
பார்க்க முடியாத கண்ணாடியாய்
உடைந்து போகிறது மனம்
உன்னை பார்க்க
முடியாத போதெல்லாம்.


குமார்

காதல் பிழைகள்




பிழைகளே இல்லாத
இலக்கியங்களாய் இருந்ததில்லை
நம் காதல்............

இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சில எழுத்து பிழைகள்........

இருந்தும் சுவைத்திருக்கிறது.....

பொருட் குற்றங்கள்
எதுவும் இல்லை என்பதால்.

இர.குமார்.

வருத்தங்கள்




சிரித்து விட்டு செல்
முறைத்து விட்டு செல்......
இல்லை.........
கண்டுகொள்ளாமலே செல்.........
எப்படியேனும்
என் பாதைகளை
ஒருமுறையேனும் கடந்து செல்........

நீ என்னை கண்டு கொள்ளாததில்
எப்பொழுதும் வருத்தங்கள் இல்லை........
உன்னை காணாமலேயே
இருப்பதுதான்...............

இர.குமார்.

Thursday, November 11, 2010

புகைப்படம்


இரவுகள் தோறும்
என் தலையணையின் கீழ்
உன் புகைப்படம் உறங்குகிறது....

உன் நினைவுகளை மறக்காமல்
இருக்க அல்ல...........
கனவுகளிலும் நீ எப்பொழுதும்
தொலையாமல் இருக்க........

இர.குமார்.

காதல் பூக்கள்

நேசக் கடைகள் பரப்பி
கூவி கூவி நிதமும்
காதல் பூக்கள் விற்கிறேன்......

சூடிக் கொள்ள வேண்டாம்....

சற்றே நின்று
சிரித்து விட்டு போ....

இந்த பூக்கள் சற்றேனும்
வாடாமலி
ருக்கும்......

இர.குமார்.

காதல் வானிலை


சற்று முன் கிடைத்த வானிலைச் செய்தி........
உன் நேச மழைகள் இல்லாமல்

வறண்டு போனதாம்
என் இதயம்.............. அறிவித்தது என் காதல் வானொலி......
வாசித்து முடிக்கும் முன்னே

இடியுடன் கூடிய கன மழையாய்

வந்து சேர்ந்தது
உன் முத்தம்.
இர.குமார்.

குறள்


நீரின்றி அமையாது உலகம்
என்கிறது குறள்...........
நீயின்றி இல்லை என் உலகம்
என்கிறேன் நான்...............
குறளை மாற்ற
விருப்பம் இல்லைதான்........
இருந்தும் நீ என் இதயத்தை
மாற்றி எடுத்து சென்றபடியால்........

இர.குமார்.

Saturday, August 9, 2008

தோல்விகள் தொலைவில் நிற்கட்டும்


புழுதி படிந்த போர்களத்தின் பாசறையில்
குருதி படிந்த வாளை துடைத்து
வானை நோக்கிய பொழுது
விழியின் நீர்த்துளிகள் சில
தோல்வியினை பறைசாற்றின.............
இதயத்தில் இம்சைகள்..........
மனதில் ரணங்கள்.........
செல்லும் பாதைகள் எங்கும் தடைகற்கள்........
ஒரு பனி படர்ந்த நாளின்
புகை படிந்த கண்ணாடியாய்
தோல்விகளால் வாழ்க்கை தெளிவில்லாமல்...............
திசைகளின் கிழக்கு பிரதேசங்களிலிருந்து
சில பறவைகள் கீழிறங்கி வந்தன...........
தங்களின் முயற்சியின் சிறகுகளை
பரிசளித்து விட்டு பறந்தன...............
காற்றின் இசைக்கு தலை அசைத்த
பூக்கள் சிலதங்கள் விதைகளை
பரிசளித்து விட்டு தங்கள் பணியை தொடர்ந்தன...............
வானப் பிரதேசங்களில் ஒன்றாய்
கூடிய மேகங்கள் நீர்த்துளிகள்
சிலவற்றை தூவி குளிர்வித்தன.................
இழப்பதற்கு ஒன்றுமில்லை
மெல்லியதாய் காற்று ரீங்காரமிட்டு
ஆறுதலாய் தழுவியது................
பிம்பங்களை பிரதிபலிக்கும்
கண்ணாடியை போல்
தெளிவாய் சில வெளிச்ச பாதைகள் முன்னே.................
மனதில் மூலைகள் எங்கும்
உறுதிகள் இருக்கும் வரை..........
நினைவுகள் முழுவதும்
நம்பிக்கைகள் நிரம்பி வழியும் வரை........
இதயம் முழுதும்
வலிமைகள் இருக்கும் வரை...........
தோல்விகள் என்றும்
தொலைவில் நிற்கட்டும்.
இர.குமார்.

Thursday, August 7, 2008

இது மனதின் மழைக்காலம்

ஒரு குளிர்கால மாலை
இருளும் வேளையில்
சில நீர்த்துளிகள்
புவியை நோக்கிச் சிதறின.............

வெளிச்சப் பறவைகள்
தங்கள் சிறகுகளை முடக்கி
ஓயும் வேளையில்......
நிலவு தன் முகம்
காட்டி நகைத்தது..............

பறவைகள் சில விரைவாய்
தங்கள் கூடுகள் தேடின........
மரங்கள் மகிழ்ச்சியாய்
தங்கள் கிளைகள் விரித்தன......

மாலை மங்கும் வேளையில்
முகம் எங்கும் துளிகளாய்
இரு மான்விழிகள்
குறும்பாய் விழித்தன என்னை.......

அழகின் சாயல்கள்
சிறிதும் குறையாமல்
அதரங்கள் இரண்டு விரிந்து
இசையை தெளித்தன......

தோகைகளே இல்லாமல்
இரு கால்கள் அழகாய்
இங்கே நடை பயின்றன.

உன்னை பார்த்தபோது
நொடிகள் ஏனோ
நின்று போயின......

சிறகுகள் சில முளைத்தன......
உலகம் ஏனோ சுழன்றது கீழே........

பொழிந்தும் பொழியாமலும் மழைச்சாரல்கள்
வெளியே மட்டும் அல்ல....

உள்ளேயும் கூடத்தான்.............

இது ஒரு மழைகாலம்...........
புவியில் மட்டுமில்லை..........

என் மனதிலும் கூடத்தான்.

குமார்

நட்சத்திரங்கள் மண்ணில்.........[நாங்கள் கிள்ளைகள்]

ஒரு மழை கால மாலை நேரம்.........
மயில்கள் தோகைகள் விரிக்க
மேகங்கள் எங்கும் திரள
வானை நோக்கிய பொழுது
ஏனோ நட்சத்திரங்கள் அங்கில்லை.............

தூர் வாரிய ஓடையின் அருகே
சில காகித கப்பல்களோடு
கள்ளமில்லா சிரிப்பில்
சில வெள்ளை மனங்கள்
உவகை கொண்டன................

எண்ணங்களில் மாசில்லாமல்
வண்ணங்கள் அனைத்தும் கொண்ட
வானவில்லின் அழகோடு
வஞ்சனைகள் ஏதும் இல்லாமல்
பொய்யாய் சில சண்டைகள் அங்கே...........

சிறகுகள் இல்லாமலேயே
மண்ணில் பறந்தன இக்கிள்ளைகள்.....

வரவுகள் இல்லாமல்
செலவுகள் செய்யாமல் இங்கே
ஓர் அன்பு அரசாங்கம் இவர்களிடையே..........

கவலைகள் எங்கோ மறைய
மனம் லேசானது..........

கேள்வியின்
தோலைந்த விடையாய்
நட்சத்திரங்கள் இங்கே மண்ணில்.

இர.குமார்.